தமிழுக்கு பாரதி
மூத்த மொழிகளில் நம் தாய்மொழியாம் தமிழும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி ..
தோற்றம் தெரியாத உலகில் தொன்மையான மொழி , தமிழ் மொழி.
அற்புதமான அன்னை மொழியினை உலகத்தார் நெஞ்சங்களில் நிலைத்திருக்கச்
செய்த பெருமையும் , உரிமையும் தமிழ் பெற்றெடுத்த குழந்தைகளையே சாரும்.
அந்த வகையில் தமிழுக்குக் கிடைத்த அற்புதக்குழந்தை பாரதி.
பாரதி என்றவுடன், பாப்பாக்கள் நெஞ்சங்களில் முறுக்கு மீசையும் ,
சிரித்த முகமுமாக தலைப்பாகையுடன் வருவதென்பது,
அவரின் பாடல்களின் வெற்றி என்பேன்.
1882ஆம் ஆண்டு தமிழுக்கு பிள்ளையாய் கிடைத்த
சுப்பிரமணிய பாரதியார் 1921 ஆம் ஆண்டு இறக்கும் வரையில் ,
அவர் தமிழன்னையை எப்படி எல்லாம் அலங்கரித்து இருக்கின்றார் தெரியுமா !
அற்புதமாய் அதி அற்புதமாய் அலங்கரித்து இருக்கின்றார் ……
ஒளியேற்றி இருக்கின்றார்.. முப்பத்தி ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த பாரதியார்
சந்தித்தவைகளும் சாதித்தவை ஏராளம்….
பழமையான உலா ,மடல் , அந்தாதி , நூல் பாடி , செல்வந்தர்களையும்
பெண்கள் அவர்தம் அங்கங்களையும் பாடிப் பரிசில் பெறும் சராசரி
புலவனாக பாரதி இருந்தார் என்பது உண்மை ஆனால் அது ஆரம்பம் ……….
தொட்டால் தானே நெருப்பு சுடும் - என்பது பாரதிக்கு தெரியும் ,பாரதியும்
தொட்டார் சுட்டுக் கொன்று விட்டு விலகினார் .மாறாக ,மனிதரை மனிதரை
புகழ்ந்து பாடித் திரியும் பெருமையை இகழ்ந்து பாடினார் பாரதியார் .
பரிசு என்ன கிடைத்தது தெரியுமா? ஜமீன்தாரின் வெறுப்பும் பகையும் தான்.
காட்டாறாய் புறப்பட்ட பாரதியின் காலடியில் இவை குப்பைகள் போல
விலக்கப்பட்டன.
தாரமும் குருவும் தலைவிதிப்படிஎன்பார்கள். உண்மைதான் , ஆனால் இன்னொன்றையும் சேர்ப்பது என்பது நன்று
என்று எண்ணுகின்றேன். நல்ல நண்பர்கள் அமைவதும் தலைவிதிப்படி
என்பதுதான் அது. பாரதியாருக்கு அது அமைந்தது. வ.வே. சு. ஐயர் போன்றவர்கள்
பாரதி எனும் தீபம் பெரும் சோதியாய் ஒளிர்வததற்கு துணை நின்ற
நல்ல நண்பர்கள் என்றால் அது மிகையல்ல .தோழர்கள் துணைவர,
பாரதி தன் பயணத்தில் தூசுதட்டியவைகள் ஏராளம்..
தெய்வ பக்தியில் ஒன்றியவரான பாரதியார் தெய்வத்தின் பெயரினால் உலாவரும்
மூடநம்பிக்கைகளை வெறுத்தார்- எரித்தார்- எதிர்த்தார்- பாடினார். வெற்றியும்
கண்டார் . கிராமத்து மக்களுக்குப் புரியும்படி பாடி அவர்களின் புன்னகையில்
இன்பங்கள் கோடி பெற்றார். இரக்கத்தில் பாரதிக்கு நிகர் பாரதி தான்.
நல்லதை விதைக்க வேண்டுமஎன்பதை நன்கு உணர்ந்திருந்தார் பாரதியார். அதனால் தான் ஏராளம்
‘பாப்பா பாடல்களை’ பண்ணோடு இசைப்பதற்கு இலகுவாய் அமைத்து,
ஆனந்தம் கண்டார். பிள்ளைகளின் சிரிப்பினிலே இறைவனை கண்டார்.
வல்லமைகளை பாடினார்… இனியவராய் வளரும் வித்தைகளை பாடினார்.
ஒற்றுமையின் உன்னதத்தை பாடினர். உழைப்பின் ஊதியத்தை பாடினார்.
சமத்துவத்தின் சத்தியத்தை பாடினார். சரித்திரத்தை வெல்லும் வித்தைகளை
பாடினர். இப்படியாக பாப்பாக்களின் உள்ளங்களில் நல்ல விதைகளைத் தூவினார்
பாரதியார்.
தேசத்தின் விடுதலைக்காய் தீயாய் நின்ற பாரதி ‘அச்சமில்லை அச்சமில்லை’ என தொடங்கி எண்ணற்ற பாடல்களை பாடி ,பட்டிதொட்டி
எங்கும் கிராமத்து மூலை முடுக்கு எங்கும் விடுதலைத் தீயை பற்றிக் கொள்ள
பாடுபட்டார்.பகையாளி நொந்து நின்ற போதிலும் அச்சமின்றி விடுதலையின்
உச்சம் காண வீர நடைநடந்தார்.
அதுமட்டுமா பாரதி செய்தார்? இல்லை. இல்லவே இல்லை. தாய்க்குலம்
அடுப்பங்கரையில் இடுப்பு ஒடிய கண்ணீரோடு நிற்பது கண்டு துடிதுடித்தார்.
அன்னையர் குலம் ஆனந்தக் கண்ணீர் சிந்த வேண்டும் என திட்டம் கொண்டார்.
பெண் விடுதலை குறித்து பாடல் பாடி, சிந்தனையை தூண்டி கல்லையும் கரைய
வைத்தார் ..
சென்னையில் சுதேசமித்திரன் என்னும் நாளிதழுக்கு ஆசிரியனாக பத்திரிகைத் துறையில் கால்பதித்து பாரதி தமிழுக்கு மெருகூட்டினார். ஆட்சியாளரின் அடாவடித்தனத்தை கண்டு கொதித்துப்போன பாரதியார், இந்தியா எனும் இதழை தானே தொடங்கி தமிழுக்கு அணிகலன் சூடினார்.
தமிழுக்குப் பெரும் சொத்து ; தமிழுக்கு கிடைத்த வரம்; பாரதியார் எனின் தவறல்ல. தமிழன்னையின் பிள்ளைகள் நாங்கள் எல்லாம் வெள்ளை
மலர்களாய் வாசம் வீச வேண்டும் என்ற பாரதியாரின்
பாதங்களை பக்தியோடு தொழுகின்றோம்.
நாளும் நல்ல எண்ணங்களால் தம்மை வளப்படுத்தி, தமிழுக்குக் கிடைத்த
பாரதியார் பாடல் அடிகளை மனதில் இருத்தி நாட்டிற்கும் வீட்டிற்கும்
நல்லவர்களாய் வல்லவர்களாய் வாழ்வோம்; வளர்வோம் என்று கூறி
விடைபெறுகின்றேன்
Post a Comment