தமிழ் வளர்த்த சான்றோர்
குமரிக்கண்டம் வளர்த்த குமரித்தமிழில் நனைய, என்னைப்
பார்த்திருக்கும், என்நிலை துணிய காத்திருக்கும்,
வணக்கத்திற்குரிய பெரியவர்களே… உங்கள் அனைவருக்கும்
என் இனிய வணக்கங்கள்….. சிந்தை மகிழ்ந்து ஏற்றிடுவீர்…….
நான் எடுத்தியம்ப வந்த தலைப்பு ‘ தமிழ் வளர்த்த சான்றோர்’.
தோற்றம் தெரியா உலகினில் தோன்றிய மொழிகள் பலவாம்,
அதில் தோன்றிய உயிர்களும் பலவாம் , காலத்தால் அழிக்கப்பட்ட
மொழிகளும் பலவாம், உயிர்களும் பலவாம்……. இவ்வுலகம் எப்படித்
தோன்றியது என ஊகங்களும், சமய- இலக்கிய- செவிவழி
கதைகளும் பலவாறு கூற, வீரியவிஞ்ஞானமும் தலையைப்
பிடித்துக் கொண்டிருக்க, பூமி முடியப் போகின்றது என்ற செய்தி
காதை சூடாக்கி கொண்டிருக்க, அன்னைத்தமிழ் என்றும் கொஞ்சும்
மொழி பேசும் பிள்ளை தமிழாகவே கலகலவென சிரிப்பது சிறப்பே.
உலக முதல் மொழிகளுள் ,முதன்மை மொழிகளுள் நம் தமிழ்
மொழியும் ஒன்று என்பது நமக்கெல்லாம் சிறப்பே!!!
சிறப்புமிக்க தமிழைக்காலங்காலமாக வளர்த்த சான்றோர்கள்
எண்ணில் அடங்காதவர்கள். தமிழை சான்றோர்கள் வளர்த்தார்கள்,
தமிழ் அவர்களை வாழ வைத்தது.
குறுமுனி அகத்தியர் மிகையாக காதலித்த தமிழ்…..!
முனிவரான அகத்தியர் தன் வாழ்நாள் எல்லாமே தமிழுக்காக
அரும்பாடு பட்டார் என்பது சமய இலக்கியங்களில் இருந்து
தெளிவாகின்றது. அவர் தமிழுக்கும் விதை போட்டு , உரம் போட்டு,
பசுமை போர்த்திய மகான். அழகுக்கு பெயர் போன முருகக்
கடவுளை தமிழுக்கு அதிபதியாகி, தமிழ் என்னும் விருட்சத்தின்
ஆணிவேர் போல திகழ்ந்தவர் அகத்தியர்.
அகத்தியர் வழிவந்தோர் தமிழை வளர்ப்பதற்காக இயற்கையோடு
படாதபாடு பட்டு, போர் புரிந்து முடிவில் அதனோடு இணைந்து
தமிழை வளர்த்தனர்... இன்று உயிரை வெப்பமாக்கும் சொல் சுனாமி.
இது இன்று நேற்று வந்ததொன்றில்லை ….தமிழ் வளர்த்த சான்றோர்கள்
இதனோடு அன்றே போராடி இருக்கின்றார்கள்
என்கின்றன சான்றுகள்... தமிழ் வாழ்ந்த குமரிக்கண்டம்
அழிந்ததும் , முதற்சங்கம்-இடைச்சங்கம்-கடைச்சங்கம்
தோன்றியதும் , இடம் மாறியதும் எதனால் ? இதனால்தான்.
ஆம். கடல்கோளால். அன்று கடல் கோள் . இன்று சுனாமி.
நீதிக்கு களங்கம் வரகூடாதென்று பணிபுரிந்த நக்கீரர், வந்திருப்பது கடவுள் தான் எனத் தெரிந்தும், நெற்றிக்கண் திறப்பினும்,என்னை வெந்தழலால் வீழ்த்தினாலும் குற்றம் குற்றமே என்ற வாதிட்டு தமிழில் தமிழை எழில் கொஞ்ச வைத்தார்.
யாருக்கும் அடிபணியது, எங்கும் விலை போகாது, நெஞ்சை
நிமிர்த்தி நடந்தவர் கம்பர். தமிழை நேசித்தார். அதனால் ஒப்பற்ற
காவியம் பாடி உலக அன்னையின் அதரத்தில் ஆரமாய் சூட்டினார்.
அவரைச் சூழ்ந்து கொண்டது.
நெறி மாறிப்போகும் மானுடர் தன்னை , சரி வழிகாட்ட தமிழின் தனயன் திருவள்ளுவர் ஆக்கியதே திருக்குறள். இன்று உலகம் முழுவதும் தமிழின் பெருமையை பறைசாற்றி நிற்பது திருக்குறள். உலகப் பொதுமறையாய் தமிழில் பிறந்த ஒரு நூல் உலாவருவது நமக்கெல்லாம் பெருமை அல்லவா….! பொய்யாமொழிப் புலவர் சான்றோர் சான்றோர் அல்லவா!
அரிதாகக் கிடைத்த நெல்லிக்கனியை அருந்தி அதிகாலம் தான் வாழ விரும்பாத தமிழை நேசித்த மன்னன் , தமிழ் மூதாட்டி ஔவைக்கு கொடுத்து, ‘அன்னையே அருந்தினால் தமிழ் வளரும்,
தமிழ் செழிக்கும், தமிழ் மணம் பரப்பும்…. என்றானே அந்த மன்னவன்!!! . அவனும் தமிழ் வளர்த்த சான்றோன் அல்லவா?… தள்ளாடும் வயதிலும் பொல்லாத வெயிலிலும் மழையிலும் நில்லாது நடந்து தமிழ் வளர்த்தாரே பாட்டி அவ்வை !!! அவரை எப்படி நாம் மறப்பது !!. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என அவர் விட்டுச் சென்றவை கொஞ்சமல்ல …
கபிலர், காளமேகம், இரட்டையர் என தமிழ் வளர்த்த சான்றோர்கள்
ஏராளம் ஏராளம். நல்ல எண்ணங்கள் அது உதயமான நெஞ்சத்தையும்
சேர்த்து வளர்க்கும் என்பது போல் தமிழை இவர்கள் தன்னலம் கருதாது
வளர்த்தார்கள், தமிழ் இவர்களை தன்னோடு சேர்த்து வளர்த்தது.
சமயச் சான்றோர்களும் தமிழை வளர்க்க தவறவில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என நாயன்மார்களும், ஆண்டாள் போன்ற ஆழ்வார்களும் இறைவன் புகழோடு தமிழை
வளர்த்த போற்றுதற்குரிய சான்றோர்களே…!!
இத்தாலியரான பாதிரியார் தமிழைக் கற்றார், தேவைக்காக கற்க முனைந்தவர் ‘தேவாமிர்தம்’ இதுவென தன் பெயரை ஏமாற்றினார்.. அவர்தான் சதுரகராதி தனை தமிழுக்கு முதன்முதலில் தந்த வீரமாமுனிவர்.
இலக்கிய கண்ணாடிகளில், மன்னர்களும், முனிவர்களும்,
புலவர்களும், தனவந்தர்களும், குடியானவர்களும் என தமிழ்
வளர்த்த சான்றோர்கள் பிம்பங்களாக தெரிவது என்பது மகிழ்வே….
அன்று இவர்களை தமிழ் வளர்க்க அரும்பாடுபட்டது போன்று
அண்மைய நூற்றாண்டுகளிலும் பல பெரியவர்கள் தமிழை
வளர்ப்பதில் அரும்பாடுபட்டு உள்ளார்கள் என்பது உண்மையே.
நீண்டு செல்கின்றது. தமிழை நேசித்து, அது வாழ வாழ்ந்தவர்கள். அதனோடு நின்றவர்கள். அதனாலே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்களை எப்படி நாம் மறப்பது..!
தமிழ் வளர்த்த சான்றோர்கள். இவர்களின் அர்ப்பணிப்புகள் மகத்தானவை. இவர்களுக்காக சிந்தியது வரும் வியர்வை மட்டுமல்ல குருதியும் கூடத்தான்…..! பட்டினி கிடந்து, பசியால் வெந்து, மழையில் நனைந்து, வெயிலில் வேகி, முட்களில் சிக்குண்டு, கற்களின் இடருண்டு, மூச்சை தமிழுக்காய் இழுத்துப்பிடித்து , துன்பத்தில் இன்பம் கண்டு வாழ்ந்தவர்கள்… துயரத்திலும் மகிழ்வினை கண்டவர்கள்….. சொத்துக்கள் -சுகங்கள் அனைத்தையும் தமிழ் என்னும் மூச்சுக்காற்றுக்கு அர்ப்பணம் செய்தவர்கள் ……..தமிழில் தேசமெங்கும் இவர்களின் முகங்கள் மலர்ந்து சிரித்துக் கொண்டிருப்பது சிறப்பே!
மனித வாழ்விற்கு மூலம் மொழி.. அம்மொழிகளில் மூத்த மொழி தமிழ் ! தமிழுக்கு நாமெல்லாம் பிள்ளைகள் என்கின்ற மகிழ்வோடு தமிழ் வளர்த்த சான்றோர் அனைவரையும் பக்தியோடு மனதிருத்தி வணக்கம் செய்து பணிகின்றேன்…
Post a Comment