காதல்
1
நெடுதுயிலில் அவன் வரவை
கணப்பொழுது கண்டதுமே
ஆவி என் உடல் நீங்கியதாய்
கனாக்கண்டேன் நான் தோழி
அன்றொரு நாள் துஞ்சுகையில்
என் கைத்தலம் பற்றியவன் - என்
மனதை திருடி சென்ற
கதை பகர்வேன் கேள் தோழி
பித்துப்பிடித்தடி
சித்தமும் கலங்குதடி
மொத்தமாய் என்னை ஈர்த்த- அவன்
முகவரியும் நானறியேன்
நாணமே நாணமுற
நாடி எல்லாம் துடிக்குதடி
நாள் பொழுது தேதி எல்லாம்
சத்தமின்றி கடக்குதடி
கண்ணன் என்று கூறமாட்டேன்
பிற பெண்ணை தீண்டமாட்டான்
இராமர் என்று சொல்லமாட்டேன் - என்னை
தீக்குளிக்க சொல்ல மாட்டான்
கனவெல்லாம் காட்சியாக
மாறுவது எக்கணமோ
வாஞ்சையுடன் காத்திருப்பேன்
காதல் மொழி பகிர்ந்திடவே
2
ஏதேதோ எண்ணம் வந்து
என் மனதை பிழியுதடி
எங்கேயும் பார்த்தாலும்
திருமுகமே தோன்றுதடி
இப்படியாய் ஓர் உணர்வு
எப்பொழுதும் பிறந்ததில்லை
முப்பொழுதும் அவன் நினைவு
முக்குளிக்க செய்யுதடி
உண்ணவும் ஆசையில்லை
உறக்கமும் கூடவில்லை
உள்ளுணர்வு உள்ளிருந்து
ஏதேதோ செய்யுதடி
காதல் மொழி பகன்றதில்லை
காதல் லீலை புரிந்ததில்லை
காது கொடுத்து பேசவில்லை- இருக்க
காணவில்லை என் மனதை
3
பேசி சிரித்த அந்த நாட்கள்- என்
பெயரை செபித்த அவன் மொழிகள்
சிரித்து ஒளிரும் அவன் நயனம்
என்னை மயக்குதடி தோழி
காற்றில் கலந்த அவன் குரலும்- என்
காதில் நிற்குதடி தோழி
காந்தங் கவரும் அவன் பார்வை
நாணமுற செய்ததடி தோழி
தரைமீது நடக்கையிலும்
மிதப்பதாய் தோணுதடி
இன்னும் என்னவெல்லாம் ஆகும் என
பயம் கொள்ளச் செய்யுதடி
அதிசயமாய் அவன் சிரிக்கையிலே
நெஞ்சமெல்லாம் நிறையுமடி
நேசமான அவன் பாசம் - என்
தாயினை உணர்த்துதடி
Post a Comment