கிராமிய இலக்கியம்
அழகு நிறை கிராமிய வாழ்வு தனில், மனமெனும் கருவறையில் உருப்பெற்று, கிராமிய மண்வாசனை கமழும் வகையில், ஓசைநயம் மிக்கதாய் , கிராமிய மக்களின் உள்ளத்து உணர்வுகளை பிசகின்றி பிரதிபலிக்கும் பிம்பமாய்- வெளிப்பட்டு நிற்பவையே ‘கிராமிய பாடல்கள்’
கருவறையில் தொடங்கி , கல்லறையில் நிறைவு காணும் மனித வாழ்வின் அத்தனை நிலைகளிலும் அவனோடு கதை பேசும் சிறப்பு கிராமியப் பாடல்களுக்கு உரியது.
மண் தொட்டதும் மருத்துவிச்சி பாடலுடன் தொடங்கி, அன்னையின் அரவணைப்பில் தாலாட்டாய் தொடர்ந்து , வளரும் பருவத்தில் விளையாட்டு பாடலாய் வளர்ந்து , தொழில் களத்தில் அசதி மறைக்கும் தொழிற்பாடலாய் நிலைத்து , துளிர்விடும் காதலால் காதல் பாடலாயும் , மணக்கோலத்தில் நலங்கு பாடலாயும் மாறி , இறுதி ஊர்வலத்தில் ஒப்பாரி பாடலாக முடிவடைந்து………… என வாழ்வின் அத்தனை அத்தியாயங்களிலும் உணர்வோடு கதை பேசும் தனிச்சிறப்பு கிராமியப்பாடல்களுக்கே சொந்தம்.
கிராமத்தின் மனமொழியாய், தனித்தமிழால் கோர்த்து எடுத்த சீரிய இலக்கியமாய் , நேரிய பொருள் நிறைந்தனவாய், செவி வழி நுழைந்து-மனதினுள் நகர்ந்து- வாய்வழி மறுபடி உயிர் பெற்றனவாய், அன்றாட வாழ்வின் இன்ப துன்பங்களை வெளிப்படுத்துவனவாய், காலங்கள் பல சென்றாலும் வாழ்க்கைபவையாய் ,மொழியின் மூத்த இலக்கியமாய் - என அத்தனை பரிமாணங்களிலும் சிறப்பியல்பு பெற்றது நாட்டார் பாடல் எனின் மிகையல்ல.
கிராமிய இலக்கியம் , நாட்டார் இலக்கியம் , வாய்மொழி இலக்கியம் , மரபு வழி இலக்கியம் , பாமரர் பாடல் , பரம்பரை பாடல் என்றெல்லாம் சொல்லப்படும் கிராமிய இலக்கியத்தின் சுவை தனை சுவைத்தாலும் திகட்டாது; இன்னமும் ஆவலை தூண்டக் கூடியவை.
‘கொவ்வை இதழ் மகளே -என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப்பசும்பொன்னே -என் கண்மணியே
கண் வளராய்……….’
என தாய் பாடும் தாலாட்டை மிஞ்சும் இலக்கியமும் அவனிதனில் இருந்திடல் கூடுமோ ?
‘ஆலையிலே சோலையிலே
ஆலங்காடி சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகி அடிக்க
பாலாறு பாலாறு பாலாறு’
ஆம் ,விளையாட்டுபாடல்கள் விளையாட்டுடன் சேர்த்தே இசையையும் மக்களிடையே ஒற்றுமையையும் வளர்க்க தவறுவதில்லை.
தொழிற்பாடல்கள் பன்முகம் கொண்டவை. அவரவர் செய்யும் வேலைகளைப் பொறுத்து அரிவுவெட்டு பாடலாகவும், மீனவர் பாடலாகவும், ஏற்றற் பாடலாகவும் - என பலவாக மலர்ந்திருக்கும். எனினும் அவை பாடப்படுவதன் நோக்கம் பெரும்பாலும் ஒன்றே . உள்ளத்து சோர்வை நீக்கி, உடற்களைப்பை மறக்க வைத்து , தன் தொழில் குறித்த உயர் எண்ணம் வர வைப்பதாக அமையும்
.
‘மண்ணை நம்பி உழுது வைத்து…….’ எனத் தொடரும் நாட்டார் பாடலின் இறுதி வரிகள் அழுத்தமானவை. ‘ உன்னை நம்பி நாம் இருக்கோம் சாமியே ! உழவர் நம்மை நம்பி இருக்குதிந்த பூமியே……’ ஆம்,உழவுத் தொழிலின் மேன்மை நிலையினை உணர்த்திட இதைவிடவும் உதாரணம் கூடுமோ?
கிராமியப் பாடல்களில் தத்துவ பாடல்கள் என்று சிறப்பான இடம் உண்டு.
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா’
வாழ்வின் ஆழத்தை இலாவகமாக தொட்டுச்செல்லும் அற்புதமான வரிகள் இவை.
கிராமத்து வாழ்க்கையிலே , காதல் ஒரு அத்தியாயம்.
‘ஓடுகிற தண்ணியிலே
உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்திச்சோ சேரலையோ அந்த
செவத்த புள்ள நெத்தியில’
‘காற்றே நீ வீசாதே
கடலே இரையாதே
நிலவே நீ எறியாதே
என்ர நீல வண்டு போய் சேருமட்டும்’
என்கின்ற காதலின் காதல் உள்ளமும் மனதை பரவசப்படுத்துபவை.
கிராமிய மக்களின் நகைச்சுவை பாங்கும் தன்னிகரற்றது. பொதுவாக சமூக சீரமைப்பு நோக்கிலும், வளர்ச்சியின் நோக்கிலும் அவை மீறப்படும்பொழுது எழும் சீற்றம் காரணமாகவும் பாடப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் பொருத்தமில்லாத தம்பதிகளை நோக்குங்கால், ‘ நாணற் பூப்போல நரைத்த கிழவனுக்கு குங்குமப்பூ போல இந்த குமர் தானோ வாழுறது’ என பரிகசிக்கும் தன்மையும் ஒருவித அழகு.
Post a Comment