பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள்
ஆண்டவனின் படைப்பில் அற்புதப் படைப்பு மனிதகுலம் என்றால் மிகையல்ல. இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதகுலம் எத்தனையோ சாதனைகளை படைத்து இருக்கின்றது. சரித்திரங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. கண்டம் தாண்டி, அண்டம் கடந்து அங்கேயும் தன்னை நிரூபித்து இருக்கின்றது.
எது எப்படி இருந்தாலும், ஒரு சில அருவருக்கத்தக்க அல்லது முற்றிலுமாய் களையப்பட வேண்டிய விடயங்கள் இன்னமும் நிலைத்திருப்பது வேதனைக்குரிய விடயமே ..
‘சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகம்’ என்கின்ற குற்றச் செயலும் இதன்பால் அடங்குகின்றது.
துஷ்பிரயோகம் என்கின்ற பொழுது உடல் உள ரீதியான துன்புறுத்தல்களும், வழங்கப்பட வேண்டிய உரிமைகளை கிடைக்க விடாது செய்தலும் -எனலாம்.
எமது சிறுவர்களுக்கு சமனான வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும், தொடர் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்குமான உரிமை உள்ளது என ஐநா பொதுச் சபையில் கூறப்பட்டாலும் கூட,
கட்டாயக்கல்வி கிடைக்காமை, பாடசாலை இடைவிலகல், 18 வயதிற்கு முந்திய கர்ப்பம் -திருமணம், உடல் உள ரீதியான துன்புறுத்தல்கள், பாலியல் துன்புறுத்தல், புறக்கணித்தல் , சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் , என சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் இன்னமும் நடந்தேறிக் கொண்டே இருப்பது விரும்பத்தகாத விடயமாகும்.
விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள். ஆனால் அப்படி துளிர்விட முன்னரே அமிலம் ஊற்றி அழிக்க நினைப்பது , எப்போது இவ்வுலகில் இல்லாமல் அழிக்கப்படுகின்றதோ, அப்போதுதான் மனிதகுலம் சீர்ப்பட்டிருக்கின்றது என அர்த்தமாகும்.
‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதன் தலை கவிழ்ந்தான்’ என நாம் மார்தட்டிக் கொண்டாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பூரணமாக ஒழிந்த பாடில்லை. இன்னமும் கூட பெண்களை காட்சிப் பண்டமாக கருதுகின்ற மனோ நிலை முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை.
வீட்டின் வறுமை காரணமாக, வீட்டுப் பணிப்பெண்களாக நாடு கடந்து செல்லும் பலரும் வீடு திரும்பாமையும் , ஒரு சிலர் சடலங்களாக திரும்புகின்ற மையையும் மறந்துவிட முடியாது.
குடும்பத்திற்காக, வெயில் மழை பாராது தமது உழைப்பின் நல்குகின்ற பெண்களுக்கு அவர்களின் உழைப்புக்கான ஊதியம் செவ்வனவே கிடைக்கின்றதா எனின் அதுவும் கேள்விக்குறியே..
பல தொழிற் தளங்களிலும் பாலியல் லஞ்சம் தலை தூக்கியுள்ளது. சிறுவயது திருமணம், முறையற்ற கர்ப்பம் , வரதட்சிணை கொடுமை , டிஜிட்டல் குற்றங்கள், தனிப்பட்ட காணொளிகள் , திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் என துஷ்பிரயோகங்களில் பட்டியல் நீண்டு செல்கின்றது.
இவ்வாறான நிலைமைகளில் இருந்து பெண்களையும் சிறுவர்களையும் மீட்டெடுக்க வழிகளும் இல்லாமல் இல்லை. பாடசாலை மற்றும் சமூக மட்டங்களில் விழிப்புணர்வுடன் கூடிய அறநெறிக் கல்வியை அறிமுகப்படுத்துதல் அவசியமாகின்றது. பெண்கள் குறித்து உயர்ந்த எண்ணம் இளைஞர்கள் மத்தியில் விதைக்கபடுதல் வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் ஆனால் பலவீனமானவர்கள் அல்ல என்கின்ற புரிதல் சமூகத்தில் அத்தனைபேரும் உணர்தல் வேண்டும்.
ஏற்கனவே அமுலில் இருக்கின்ற சட்டங்கள் இன்னமும் கடுமையாக படுதல் வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் பகிரங்கமாக தண்டிக்கபடுதல் வேண்டும். தண்டனைகளின் கடுமை பார்த்து அக்குற்றம் புரிய மற்றவர்களும் அச்சப்படுகின்ற அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் .
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களை தமது தாயைப் போலவும், சிறுவர்களை தமது குழந்தையைப் போலவும் கருதுகின்ற மனோபாவம் ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் கருக்கொள்ளுதல் வேண்டும்.
நாளைய உலகம் நலமுடன் விடியட்டும்!
புன்னகை பூக்கள் சுதந்திரமாய் மலரட்டும் !!
இனி ஒரு விதி செய்வோம்!
அதை எந்நாளும் காப்போம்!!
Post a Comment