வில்லுப்பாட்டு
திருஞானசம்பந்தர்
தந்தனத்தோம் என்று சொல்லியே - வில்லிசை பாட
வில்லிசை பாட
ஆமாம் வந்தருள்வாய் கணபதியே - / முன்னே வந்தருள்வாய் கணபதியே/
/ அருள் தந்தருள்வாய் கணபதியே/
இந்த அருமையான நன்னாளிலே
/ ஆமாம் நன்னாளிலே /
இங்கு வருகை தந்திருக்கும்
/ ஆமாம் வருகை தந்திருக்கும்/
பெற்றோர்களே! பெரியோர்களே!
அப்பு மாரே! ஆச்சிமாரே!
அக்காமாரே! அண்ணாமாரே!
தம்பிமாரே! தங்கைமாரே! [ அனைவருக்கும்]
வணக்கம் வணக்கம் சொன்னோம்- நாங்கள்
வணக்கம் வணக்கம் சொன்னோம்
/ வணக்கம் வணக்கம் சொன்னோம்- நாங்கள்
வணக்கம் வணக்கம் சொன்னோம் /
இந்நாளை மகிழ்விக்க எங்கள் சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரின் திருவரலாற்றினை வில்லிசை மூலம் பகிர வந்துள்ளோம்.
/ஆமாம் பகிர வந்துள்ளோம்/
/ எங்கட பள்ளிக்கூடத்துல தந்த வரலாற்று புத்தகம் படிக்கவே எனக்கு பஞ்சி.
நீங்கள் என்னென்டால் வரலாறு எண்டுறியல்… புவியியல் எண்டுறியல்……..
அப்ப பேசாம நான் எழும்பி போகட்டுமே……/
/அடே, அது வேற , இது வேற/
எங்களின் சைவசமயத்தை காப்பாற்றிய மிகப்பெரிய நாயன்மார் இவர். இப்பவும் நாங்கள் சைவர்களாக இருப்பதற்கு முக்கிய பங்காற்றியவர். அவரை பற்றி விளக்கமாக சொல்கிறேன்.. கேட்கிறியே….
/சரி சொல்லுங்கோ . கேட்போம்…… கேட்டுப் பார்ப்போம்/
சோழவள நாட்டிலே சீர்காழிப் பதியில் சிவபாதவிருதயாருக்கும் பகவதியாருக்கும் மகனாக அவதரித்தவர் தான் திருஞானசம்பந்தர்..
/பெயரிலேயே ஞானம் இருக்கு பார்த்தியா/
/ஓமடா தம்பி. உன்னோட இல்லாத விஷயம்தான்/
ஓம் ஓம் இப்படித்தான் ஒருநாள் அவருக்கு மூன்று வயது இருக்கும் பொழுது ஒரு நாள் அப்பாவோட சேர்ந்து குளத்துக்கு குளிக்க போய் இருக்கிறார்.. அப்பாவும் குளத்தில் மூழ்கி மூழ்கி குளித்து இருக்கிறார். அப்பா திடீரென்று காணாமல் போனதும் குழந்தை பயந்துபோய், அம்மையே அப்பா என்று அழத் தொடங்கி விட்டது…..
/என்ன அண்ணே சொல்லுறியள். ….. பிள்ளை பயந்து போச்சுதோ…. பிறகு என்ன தான் நடந்தது…/
நீ பயப்படாதே.. குழந்தை அழுகை சத்தம் அப்பாவுக்கு கேட்டுச்சு இல்லையோ அந்த கடவுளுக்கு நல்லாவே கேட்டது. உடனடியாக சிவபெருமானும் உமாதேவியாரும் இடப வாகனத்தில் இறங்கிவந்து அழுத குழந்தைக்கு ஞானப்பால் கொடுத்து அருள்பாலித்தனர்…
/ஆமாம், அருள்பாலித்தனர்…/
/ 3 வயசிலேயே கடவுளை காண்பதென்றால் சும்மாவா ? பெரிய ஆள்தான் என?/
இன்னும் சொல்லுறேன் பொறுமையா கேள்!
ஞானப் பாலை அருந்தி பெற்ற ஞானத்தினால், மூன்று வயதிலேயே…. எப்படி! மூன்று வயதிலேயே தேவாரம் பாடத் தொடங்கிட்டாராம். கேள்விப்பட்டிருப்பீங்க . ‘தோடுடைய செவியன்’ என்று…….
/ஓம் ஓம் ஓம்…. எங்கட பள்ளிக்கூடத்திலும் அடிக்கடி பாடுவினம். நல்ல தேவாரம்/
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவனன்றே.
அது சரி, நீ கெட்டிக்காரன் தானே. மந்திரமாவது நீறு தேவாரம் கேள்விப்பட்டு இருக்கிறாயோ
/எங்கேயோ கேட்ட மாதிரி தான் இருக்கு. எதுக்கும் ஒருக்கா விளக்கம் சொல்லுங் கோவன்.. கேட்டு பாப்பம்/
சரி சொல்லுறேன்.
அந்தக் காலத்துல, சைவ சமயம் பெருசா ? இல்லாட்டி சமணசமயம் பெருசா ? என்று ஒரு போட்டி இருந்துச்சாம்
/இது என்ன புது புரளி. அந்தக் காலத்திலேயும் சண்டையோ/
ம்ம்… அந்தக் குழப்பம் அந்த நாட்டு மன்னனுக்கும் இருந்திருக்கு. அப்படியிருக்கும் பொழுது ஒரு நாள், அவர் கடுமையான வெப்புநோய் வந்திட்டுதாம்.
/என்னது? வெப்புநோயோ! ஆசுபத்திரி போனவராமே?/
இல்லையடாப்பா
/ஏன் அண்ணை, அவரிட்டயும் பெட்ரோல் இல்லையோ?/
இப்ப நான் கதை சொல்லட்டுமா வேணாமா?
/ சரி சரி சொல்லுங்கோ/
பாண்டிய மன்னன் பார்த்தாராம். இது சரிவராது. உடம்புல வலது பக்கத்தை சம்பந்தரிட்டையும் இடது பக்கத்தை சமணரிட்டையும் கொடுத்து , யார் முதலில் குணப்படுத்துகிறார்களோ அந்த ஆளிட சமயம் தான் உண்மை - என்று ஒரு போட்டி வைத்தாராம்
/எப்படியும் எங்கட ஆள் தானே வென்றிருப்பார்/
எப்படி சொல்லுறாய்
/நான் தான் படம் பாக்கின்றனானே, எல்லா படத்திலேயும் ஹீரோ தானே வெல்லுறவர்/
அதுவும் சரிதாண்டா. திருநீறு கொஞ்சம் கையில் எடுத்து மந்திரமாவது திருநீறு -பாடி கடவுளைக் கும்பிட மன்னன்ட வருத்தமெல்லாம் பறந்து போச்சு. சைவ சமயம் தான் உண்மை சமயம் என்று தெரிஞ்சு போச்சு
/ஆமாம் தெரிஞ்சு போச்சு/
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமய உள்ள உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறு
/திருஞானசம்பந்தர் கடும் கெட்டிக்காரர் என/
உண்மையாத்தான், சிவபெருமானிடமிருந்து முத்துக்குடை, முத்துச்சிவிகை , முத்துப்பந்தர் , பொற்றாளம் எல்லாம் வாங்குவது என்றால் சும்மாவா?
/உண்மையாவா சொல்லுறியள் …. தங்கத்திலே தாளமா….. இப்ப தங்கம் விக்கிற விலைக்கு எனக்கும் ஒரு பொற்றாளம் கிடைச்சா எப்படி இருக்கும் ?/
நல்லாத்தான் இருக்கும். ஆனால் அதுக்கு நீ திருஞானசம்பந்தரைப் போல ஆசாரசீலரா இருக்க வேணும். மனம், வாக்கு , காயம் எல்லாம் சுத்தமாக , இறை சிந்தனையோடு வாழ்ந்தால் உனக்கும் சாத்தியம்தான்
/ஆமாம் நமக்கும் சாத்தியம்தான்/
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரதேசத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது
/பஞ்சமோ ? எங்க… எங்கட இலங்கையில் தானே/
அடேய் தம்பி பஞ்சமென்டால் இலங்கை என்று முடிவே பண்ணிட்டியா…. இது இந்தியாவில் நடந்த கதை…….. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சேர்ந்து அந்த மக்களுக்காக கடவுளிடம் வரம் கேட்டு கடவுளின் அருளினால் படிக்காசு பெற்று அதன் மூலம் அந்த மக்களின் பஞ்சத்தை தீர்த்தார்கள்…
/ ஆமாம் பஞ்சத்தை தீர்த்தார்கள்/.
அது மட்டும் இல்ல. அவயல் ரெண்டு பேரும் சேர்ந்து கன நாளாக பூட்டியிருந்த திருமறைக்காடு ஆலயத்தின் திருக்கதவு திறக்க ஒருத்தரும், மூடுவதற்கு ஒருத்தரும் தேவரம் பாடி இருக்கிறார்கள்
/பெரிய விஷயம் தான்….. மேல சொல்லுங்கோ/
பாம்பு தீண்டிய வணிகனை உயிர்ப்பித்து இருக்கிறார்
/ஆமாம் உயிர்ப்பித்து இருக்கிறார்’/
அனல்வாதம் புனல் வாதம் செய்து சைவ சமயத்தை நிலைநாட்டி இருக்கின்றார்
/ஆமாம் ,சைவ சமயத்தை நிலைநாட்டி இருக்கின்றார்/
பூம்பாவையை உயிர்ப்பித்து இருக்கின்றார்.
/ஆமாம் ,உயிர்ப்பித்து இருக்கின்றார்./
இப்படியாக இறைபக்தியோடு வாழ்ந்து கொண்டிருந்தவர் திருமணக்கோலத்தில் இருந்தபொழுது கடவுளின் அருளினால் , அவரும் அங்கிருந்த எல்லோரும் சோதியில் கலந்து முக்தி அடைகின்ற பாக்கியத்தை பெற்றார்கள்
/ஆமாம் பெற்றார்கள்/
சோதியில் கலக்கின்ற பொழுது, காதலாகிக் கசிந்து என்ற பதிகத்தினை பாடினர்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
அவரைப் பற்றி சொல்லுவதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்… இன்னொருநாள் ஆறுதலா சொல்லுறேன். இப்ப நாங்கள் விடை கொடுப்போம். என
/அப்ப அண்ணே முடிஞ்சுதோ/
சரி நாங்கள் வெளிக்கிடுவோம்… இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு இன்னும் விளக்கமா சொல்லுறேன்
/கட்டாயம் கட்டாயம்/
வில்லிசை கேட்ட அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றோம்…….. பிழை இருந்தால் பொறுத்திடுவீர்…….
உங்கள் அன்பிற்கு நன்றி
வாழியவே பல்லாண்டு காலம் நம் மதமும்
நம் இனமும் வாழியவே வாழியவே
Post a Comment