தரம்-4 கைந்நூலின் படி தேவையான இலக்கணம் கற்போம்


திணை

திணை இருவகைப்படும்
1.உயர்திணை 
2. அஃறிணை


உயர்திணை
மக்கள், தேவர், நரகர் ஆகியவர்கள் உயர்திணையின் பாற்படுவார்கள்

அஃறிணை
மக்கள், தேவர், நரகர் அல்லாத மற்ற உயிர் உள்ள, உயிர் அற்ற எல்லாம் அஃறிணையின் பாற்படும்


பால் [கைந்நூல் பக்கம் -34]

பால் என்றால் பிரிவு என்று பொருள். உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் திணையின் அடிப்படையில் 2 பால்களாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. உயர்திணைப் பால் 
2. அஃறிணைப் பால்

உயர்திணைப்பால்
உயர்திணைப்பால் 3 வகைப்படும். அவையாவன:
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்

-ஆண்பால்
     உயர்திணைப் பொருட்களில் ஆண்களில் ஒருமையைக் குறிப்பது
     எடுத்துகாட்டு : சங்கர், கரீம் 

-பெண்பால்
     உயர்திணைப் பொருட்களில் பெண்களில் ஒருமையைக் குறிப்பது
     எடுத்துகாட்டு : யாழினி, பாத்திமா 
  
-பலர்பால்
     உயர்திணையைச் சேர்ந்த எல்லாப் பன்மைச் சொற்களும் அடங்கும்
     எடுத்துக்காட்டு : மக்கள், ஆண்கள், பெண்கள்


2. அஃறிணைப்பால்

அஃறிணைப் பொருட்களைக் குறிப்பது ஆகும்.. இது இருவகைப்படும்
1.ஒன்றன்பால்
2. பலவின்பால்

-ஒன்றன்பால்
      அஃறிணைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பது
     எடுத்துக்காட்டு: அது, யானை, வீடு

-பலவின்பால்
     அஃறிணைப் பொருள்களில் பலவற்றைக் குறிப்பது 
     எடுத்துக்காட்டு : அவை, வீடுகள், யானைகள்

   


எண்

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எண் எனப்படும்.
 எண் இரண்டு வகைப்படும்.
1. ஒருமை
2. பன்மை

ஒருமை

ஏதேனும் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை என்னப்படும். பொருட்களைக் குறிக்கும் பிரிவுகளில் ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் மூன்றும் ஒருமைக்குரிய பால்கள் ஆகும்.

ஆண்பால் - முருகன், பீற்றர், அவன்
பெண்பால் - சிவரஞ்சினி, சகானா, அவள்
ஒன்றன்பால் - மான், கல், அது


பன்மை

பொருள்களில் பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். பொருள்களைக் குறிக்கும் பிரிவுகளில் பலர்பால், பலவின்பால் என்னும் இரண்டும் பன்மைக்குரிய பால்கள் ஆகும்.

பலர்பால்
எடுத்துக்காட்டு :அவர்கள், ஆண்கள், பெண்கள்

பலவின்பால்
எடுத்துக்காட்டு : அவை, ஆடுகள், பழங்கள்


இடம்
நாம் உரையாடும் பொழுது, பேசுகின்ற நாமும் கேட்கின்றவர்களும் பேசப்படும் பொருள்களும் என்று மூன்று நிலைகள் உள்ளன. அம் மூன்று நிலைகளையும்  சுட்டுவது இடம் எனப்படும்.

இடம் மூன்று வகைப்படும்.
1. தன்மை
2.முன்னிலை
3. படர்க்கை

முன்னிலை
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை எனப்படும்.
எடுத்துக்காட்டு : நீ, நீங்கள்

படர்க்கை
தன்னையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற  பொருளைக் குறிப்பது படர்க்கை எனப்படும்
எடுத்துக்காட்டு :அவள் , அவர் ,அது ,அவை





காலம்
வினைச்சொல் செயல் நிகழ்வையும், அது நிகழும் காலத்தையும் உணர்த்தும் என்பதை அறிவீர்கள்.

செயல் நிகழ்ந்து முடிந்ததா? நிகழ்ந்து கொண்டுள்ளதா? நிகழ உள்ளதா? என்பதனை , வினைச்சொல்லின் காலம் காட்டும் தன்மையால் அறியலாம்.

காலம் மூன்று வகைப்படும் :
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்

இறந்தகாலம்
செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிப்பது இறந்த காலம்
எடுத்துக்காட்டு : உண்டான்

நிகழ்காலம்
செயல் தொடங்கி, முற்றுப் பெறாத நிலை நிகழ்காலம்   ஆகும். செயல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது    இதன் பொருளாகும்.
எடுத்துகாட்டு : உண்கின்றான்

எதிர்காலம்
செயல் தொடங்கப் பெறாத  நிலை  எதிர்காலம்  எனப்படும். செயல் இனி நிகழ உள்ளது  எனச் சுட்டுவது  இதன்  நிலையாகும்.
எடுத்துக்காட்டு : உண்பான்
 
 



Post a Comment

Previous Post Next Post

Android