‘ ஊரே யாவரும் கேளிர்’

 என்பது சங்கத் தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனாரின் உலக தத்துவ வாசகம். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடும் மனப்பாங்கால்  உடனே இலக்கை அடைந்துவிட முடியாது.. செக்கு மாட்டில் பயணம் செய்து ஒருநாளும் ஊர் போய் சேர்ந்துவிட முடியாது ..மானிடா !    உன் ஊனக் கண்களால் உலகை எடை போடாதே !     உன் ஞான கண்களை திறந்து பார் !     திக்குகள் எட்டும் பரந்து விரிந்து கிடக்கின்றது. காலுக்கடியில் பொதிந்து கிடக்கும் பூமி பொக்கிஷத்திற்கும்,   தலைக்கு மேலே விரிந்திருக்கும் ஆகாயத்திற்கும் அதிகமாய் ஆசைப்பட்டவன் நீ ! நீதான் !!!   ஆசைப்பட்டால் மட்டும் போதுமா என்ன ?  மானிடா , உன்  கற்பனை சிறகை விரி ! உயரப்

பறந்து திரிந்து வா!  உலகம் ஒரு நாள் உன் காலடியில் ………. உலகையே நீ ஆளலாம். இதனைத்தான்  பாரதியாரும் ,

 ‘திக்குகள் எட்டும்  செல்வீர்கள் - கலைச் செல்வம்

அனைத்தையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’

என்று அன்றே அறைகூவல் விடுத்தார் போலும்..

காலத்தை மீறிய தரிசனத்துடன் இலட்சியக் கனவு கண்ட மஹான்களின் கனவு பலித்தது  இன்று .அப்படி என்று நான் இப்படிச் சொல்வதற்கு மனித நாகரிக வரலாற்றின் பக்கங்களை சற்றே புரட்டிப் பார்க்க வேண்டும்.


 கற்காலத்தில் நாடோடியாக வாழ்ந்த மனிதன்  ஊனுக்கும் உறக்கத்திற்கும் கண்டதே காட்சி கொண்டதே கோலம்  - என அலைக்கழிந்து கட்டுப்பாடின்றி வாழ்ந்தான்.  இடையர்காலத்திலும் தனது வளர்ப்பு ஜீவன்களுக்கு மேய்ச்சல் தரை தேடி ஓடி உருக்குலைந்து போனான் . காலச்சக்கரம் சுழன்றடித்தது. அதனை அடுத்து வந்த காலம் தான் மனித வாழ்வுக்கு அர்த்தத்தை கொடுத்தது . அதுதான் மானுட வரலாற்றில் ஒரு பொற்காலம் என்று கூறினால் மிகையாகாது. ஆற்றங்கரையோரங்களில் நிலையான விவசாய பண்பாடு நிலைபெற்ற போதுதான்,  மனிதன் ஆற்றலுடன் சேர்த்து அறிவியலை படைத்தான்..


விஞ்ஞானமும் புதிய கண்டுபிடிப்புகளும் போட்டி போட்டு வளரத் தொடங்கியபோது,   நாகரிகமும் பண்பாடும்  மறுபுறத்தில் மனித வாழ்வை புடம் போட்டன - நெறிப்படுத்தின… மனித வாழ்வு உன்னதமானது மகத்தானது என்கின்ற உணர்வு மேலோங்கியது.


நவீன வாழ்வு விசித்திரமானது-  புதிரானது… இன்றைய நவீன உலகில் ஆசைகளும் விருப்பங்களும் மனிதத் தேவைகளும் இடியப்பச் சிக்கல் ஆகியுள்ளது.  நவீன மனிதன் எப்போதும் தேவைகளைக் கொண்டு இயங்கும் ஒரு சமூக பிராணியாக , சமூக விலங்காக சித்தரிக்கப்படுகின்றான் .


புதிய புதிய கண்டுபிடிப்புகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள்,  நாடுகளுக்கு இடையிலான உட்கட்டமைப்பு வசதிகள் - தீவிர வளர்ச்சி அடைந்தன . வங்கி அமைப்புக்கள் - போக்குவரத்து வசதிகள் மேம்பாடு அடைந்தன . இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டது. தொடர்பாடல் சாதனங்களின் அசுர வளர்ச்சியும் , விரைவான தகவல் பரிமாற்றமும் மனித வாழ்வையே புரட்டிப் போட்டது . புதிய பரிமாணத்தை தோற்றுவித்தது  . நாடுகள் நகரங்களாக சுருங்க தொடங்கின..


 புதிய புதிய  சிந்தனைகள்,  கோட்பாடுகள்  , கருத்துருவாக்கங்கள் என்பவற்றின்   செல்நெறியில் இன்று உலகம் ஒரு புதிய உலக ஒழுங்கில் பயணம் செய்வதை இன்று நாம் நிதர்சனமாகக் காண்கின்றோம்… இதன் நீட்சியாகவே உலகமயமாதல் என்கின்ற சித்தாந்தமும் செயல்வடிவம் கொள்கின்றது.


  சர்வதேச ரீதியாக சிந்தனை செய் ; உள்ளூர் ரீதியாக செயற்படு -   என்றும் பிரதேச ரீதியாக சிந்தனை செய்து சர்வதேசத்திற்கு இணங்க செயற்படு என்பதுவுமே உலகமயமாதலின் சாராம்ச  தத்துவ விளக்கமாகும். அன்றோ, நாடுதான் பயணங்களுக்காக மனிதன் கடல் ஓடினான். இன்று அவன் கனவு மெய்ப்பட்டு விட்டது . உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. மனித வாழ்வு பன்மடங்கு வளம் பெற்று விட்டது.


 திரைகடல் ஓடியும் திரவியம் தேடு -  என்பதற்கிணங்க உலகம் ஒரு சந்தையாக காட்சி தருகின்றது. விண்ணைத்தொடும் அடுக்குமாடி கட்டட காடுகளுக்குள் எண்ணற்ற உற்பத்திப் பொருட்களும் , இலத்திரனியல் பொருட்களும் வந்து குவிந்து கிடக்கின்றன.   தேவை பற்றாக்குறையே இன்றி  நவீன பண பொருளாதாரம்    கடனட்டைகளுடன் முயல்கின்றது.


 பூகோளமயமாதல் என அறிமுகமாகும் உலகமயமாதல் பன்முகப் பரிணாமம் கொண்டது.


 உலகமயமாதல் என்பது ஒரு பொருண்மையை சார்புடையது .

உலகமயமாதல் என்பது முதலாளித்துவ பண்புடையது .

உலகமயமாதல் என்பது இலாபம் உடலை மையமாகக் கொண்ட சந்தை சார்புடையது.

 உலகமயமாதல் என்பது நவீன தொழில்நுட்ப சார்புடையது .

உலகமயமாதல் என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான அறிக்கை முறையாகும். 


ஒட்டுமொத்தமாக ,உலகமயமாதலின் காரணமாக ஏற்படுகின்ற நிறைவான மாற்றத்தை எந்த ஒரு   சமூகத்தினாலும் புறக்கணிக்கவும் ,  நிராகரிக்கவும் முடியாத ஓர் இயங்கியல் நடைமுறை ஆகும்.


 தக்கன பிழைக்கும் தகாதன அழிவடையும் என்ற டார்வின் கூர்ப்பு கொள்கைக்கு அமைவாக , உலகம் மாறுதல்களுக்கு ஏற்றவகையில் நமது


நாடும்  ஏற்றம் பெற்று வருகின்றது - என்பது உண்மையே. ஆனாலும், ஒரு எச்சரிக்கை மணியும் சேர்ந்து ஒலிக்கின்றது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது..


 இன்றைய உலகமயமாதல் சூழலில் மனிதவாழ்வு  பல மடங்கு முன்னேற்றமடைந்து வருவது கண்டு பெருமிதம் கொள்கின்ற  அதேவேளை, அதன் தாக்கங்கள், 

விளைவுகள் பற்றியும் எச்சரிக்கையாக செயற்படுவது காலத்தின் கடமையாகும்.

 மாற்றங்களின் வேகங்களில் சிக்குண்டவர்களின் அபயக்குரல்களும்,  அவல குரல்களும்  நமக்கு கேட்காமல் இல்லை.


இலத்திரனியல் சாதனங்கள்  மற்றும் தொடர்பு சாதனங்கள்  உடன் அதிகம் உறவாடும் மனிதனை இன்று தனிமைத்தீ வாட்டுகின்றது என்பதை உணர்கின்றோம்.





 இன்று உலகிலுள்ள அனைத்துமே விற்பனைப் பண்டமாக காட்சிப் படுத்தப் படுகின்றது.  மனித நடத்தைக்கோலங்களும் எதிரும் -புதிருமாக  முரண்பட்டு நிற்கின்றது ..மரபுகள், சடங்குகள், பண்பாடுகள், சூழலியல் போன்ற துறைகள் மிகவும் சீரழிந்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


இயற்கைக்கும் மனித செயற்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு உச்சம் அடைந்துள்ளது. உலக வெப்பமாதல், அணுக்கதிர்வீச்சு என்பவற்றின் தாக்கம் மறுபக்கமாக எதிரொலிக்கின்றது.


 அணு உலைகளின் பெருமூச்சு

 ஆலைகளின் கருமூச்சு

 தொழிற்சாலைகளின் சுடு மூச்சு -இவை

 எல்லாம் கலந்தால்,

 அடுத்த நூற்றாண்டில் மனிதன் இருப்பானோ !

 இல்லை,

 அடுத்த நூற்றாண்டில் காற்று இருக்குமோ  !!!



 என்கின்ற கவிப்பேரரசு வைரமுத்து நிகழ்காலத்தை படம் பிடித்து காட்டி ஆதங்கப்பட்டு  ஆதங்கப்படுவதைக்கண்டு  ,நாமும் விழித்துக்கொள்ள வேண்டி உள்ளது.

 நாடா வளத்தையும் நலம் நாடி நாமும் எமது நாடும் வளம்பெற வேண்டுமாயின் , இன்றைய உலகமயமாதல் சூழலில், அறிவுருவாக்கமே முதல்.. ! சோக்கிரட்டீஸ் கூறுகின்றார்,

 ஏற்றமிகு ஏதென்சு நகரத்து எழில் மிக்க வாலிபர்களே!

 இதோ நான் தரும் அறிவாயுதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்!                                                               

      ‘அறிவாயுதம்’அகிலத்தின் அணையாத அற்புத சோதி!!


நாம் வாழ்வது இந்த உலகில்…… நம் கைகளில் இருப்பது இந்த உலக வாழ்வு……..வையத்துள் வாழ்வாங்கு வாழவே  - நாங்கள் ஆசைப்படுகின்றோம் .. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது  அபலைத்தனம்.  விரும்பியதை எல்லாம் விரும்பியபடியே பெற வேண்டும் - என்று மனிதன் சதா கனவு கண்டு வந்துள்ளான்..


எனவே , அகிலத்தின் அணையாத அற்புத சோதி ஆகிய அறிவாயுதத்தை பயன்படுத்தி எமது நாட்டுக்கு,

  போர் இல்லா வெற்றி

  குருதி சிந்தாப் புரட்சி 


 தெவிட்டாத இனிமை

 சாவா மூவா வாழ்வு

 என்றும் வளர்ந்து கொண்டே செல்லும் இனிமை வளம்


 பெருமையோடு பின்னோக்கிப் பார்த்து,   ஏறு நடை போட்டு  முன்னோக்கி செல்வோம், சமூக மாற்றம் ஒன்று தான் நிரந்தரம்………..!!! 

  



Post a Comment

Previous Post Next Post

Android