தமிழின் பெருமை

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ்,  தொன்மை தமிழ் ,

இன்பத்தமிழ் , எங்கள் உயிர் மூச்சாம் தாய் தமிழின் பெருமையை

உரைக்க வந்தேன் ……அனைவருக்கும் வணக்கம்.


‘கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

 கழையிடை ஏறிய சாறும் 

பனிமலர் ஏறிய தேனும் 

காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் 

நனிபசு பொழிந்திடும் பாலும் 

 தென்னை நல்கிய குளிர் இளநீரும் - இனியன என்பேன் எனினும்

 தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்’


 என்று தமிழின் இனிமையை ,  இளமையை , பெருமையை

வாயார வாழ்த்தி போற்றிப் புகழ்ந்தார் எங்கள் பாரதிதாசன்.


ஆம் , உண்மைதான்!  இன்று உலகிலே தோன்றிய மிகத் தொன்மையான மொழிகளில்  ஒன்றாக எங்கள் தாய் மொழியாம் தமிழ்மொழியும் சிறப்பிக்கப்படுகின்றது… பெற்ற தாய்க்கு சமமாக பிறந்த பொன் நாட்டுக்கும் மேலாக தமிழ் மொழி  வணங்கப்படுகின்றது .வழங்கப்படுகின்றது…….. அதனால் தான் அன்றோ தமிழ் மொழிக்கு செம்மொழி என்னும் உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. செம்மொழியாம் தமிழ் மொழி உலகம் எங்கும் ஒலிக்கும் அழகு கண்டு தமிழ்த்தாய் உள்ளம் பூரித்து பிரகாசிக்கிறாள்…..

 

தமிழனின் பெருமையும்-  உயர்வும், செம்மொழியாம் தமிழின் பெருமையும்

உரைத்திட உரைத்திட உள்ளம் தித்திக்கும்.

தமிழுக்கு அழகு சேர்ப்பது இலக்கண இலக்கியங்கள் ஆகும் மொழியின்

இனிமையை ,  மொழி ஆளுமையை,  தித்திக்க திகட்டாமல்

எடுத்தியம்புகின்றன இலக்கியங்கள்.


 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
 இனிதாவது எங்கும் காணோம் 
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் 
பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு 
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் 

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்  பாரதியாரின் இந்த வைர வார்த்தைகள் தான் தமிழின் உலக தத்துவத்தை பறைசாற்றும்..


தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - ஆக , தமிழர்களின்

உணர்வோடு இரண்டறக் கலந்து உயிர்மூச்சாக, 

இரத்தமும் சதையுமாக வாழ்வதற்கு காரணமே தமிழின் பெருமை ஆகும்..


 தமிழன் என்றொரு இனம் உண்டு  ; தனியே அவனுக்கு

ஒரு குணம் உண்டு ,ஏனென்றால் தமிழர்கள்

உலகமெல்லாம்பரந்துவாழ்கின்றார்கள்.

தமிழகத்தில், இலங்கையில், 

மலேசியாவில் ,  மொரீசியசில் ,  சிங்கப்பூரில் ,

ஐரோப்பிய நாடுகளில்  என எங்கெல்லாம் அவர்கள்

தேசம் விட்டு பிரிந்து சென்று வாழ்ந்தாலும் , 

தாம் வாழும் நாடுகளிலே ,  நமது தாய்மொழியை

விடாமல் மொழி உணர்வோடு அதனைப் பற்றிப்

பிடித்து வாழ்வதென்பது தமிழர்களின் மரபாகும் ;

அது தமிழரின் பண்பாடாகும்…


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கின்ற 
சங்கத்தமிழ் தந்திட்ட  உயர்ந்த தத்துவத்தை
உலகம் என்று படிக்கின்றமை நமக்கு பெருமை அல்லவா ?

தமிழ்மொழி அழகிலே மட்டும் உயர்ந்து
விளங்கவில்லை ; தமிழ் காட்டும் வாழ்வியல்
தத்துவங்கள் , தமிழ் காட்டிய அறிவியல் தத்துவங்கள்
  என்பன முக்காலத்துக்கும் பொருந்துகின்ற அருமருந்தாகும்…..

மகாபாரதம் , கம்பராமாயணம்  போன்ற
புராண இதிகாச கதைகள் ஊடாக நம் வாழ்வு
செம்மைப் படுத்தப் படுகின்றது . 
போரில் ஈடுபடுபவர்கள் யாரும்
வெல்வதில்லை ; மாறாக  போர் தான்
வென்றது என்னும் தத்துவத்தை இந்த
இதிகாசங்கள் எமக்கு  அறம்  உரைத்தன அல்லவா ?

மனித வாழ்வை மகிமைப்படுத்தும் ,
மேம்படுத்தும் உன்னத கருத்துக்களை
அன்றே தமிழ் உரக்கச்சொல்லி இருக்கின்றது…
வள்ளுவமானது , ‘திருக்குறள்’  என்னும் இரு
வரிகளில் அணுவையும் துளைத்த  நுண்மையான
அறக்கருத்துகளை மக்கள் மனங்களில் விதைத்து
நல்லறுவடையை தந்தது நம் தமிழ் அல்லவா ?

அகப்புற வாழ்வை செழுமைப்படுத்தும் ஆயிரம்
கருத்துக்களோடு உண்மையான வாழ்வை
படைக்க ,  தமிழ் வழி சமைத்து இருக்கின்றது…
அன்புக்கும் - அறிவுக்கும் -  கண்டிப்பும் குறி சொல்லி ,
வீரத்துக்கும் விவேகத்துக்கும் புத்திமதி சொல்லி, 
ஆக்கத்திற்கும் அழிவிற்கும் -  வகை கூறி வெற்றிக்கும்
தோல்விக்கும் , ஏற்றத்திற்கும்   இறக்கத்திற்கும் - 
நிலை கல்லாய்  இருந்து , என்றும் செம்மொழியாம்
தமிழ் மொழி எமது பண்பாட்டு வாழ்வியலுக்கும்
உற்ற துணையாய் நிலைத்து நிற்கின்றது..

ஓடையிலே என் சாம்பல் ஓடுகின்ற போதும்  ,
ஒன்  தமிழே என்றும் சலசலத்து போக வேண்டும் ..
பாடையிலே என் உடம்பு படுத்துறங்கும்  போதும்
பைந்தமிழில் என்றும் கலகலத்துப் போக வேண்டும்
என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பாடுகின்றார் .

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழோடு

வாழ்வோம் தமிழால் வாழ்வோம்……….. 



Post a Comment

Previous Post Next Post

Android