வாக்குரிமை பேணுவோம்
நமது சமுதாயம் இந்தப் பூமிப்பந்தில் படிமுறை படிமுறையாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆரம்பகால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.. இயற்கை இயற்கையை வழிபட்டார்கள்.குழுக்களாக இணைந்து வாழ்ந்தார்கள். அவர்களின் குழுக்களுக்கு தலைவன் அல்லது தலைவி என்று ஒருவர் இருந்தார். அந்த தலைமைக்கு கட்டுப்பட்டு ஒழுகினார்.. அதன் நீட்சியாகவே இன்றைய அரசு மற்றும் அரசியல் அமைப்பினை அவதானிக்கின்றோம்.
ஆரம்ப காலத்தில், தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் நோக்குகின்ற பொழுது முடியாட்சி முறையே காணப்பட்டது. இது இப்போதும் பல நாடுகளில் காணப்படுகின்ற விடயமாகும். அந்த காலத்திலும் அரசன் , புலி தனது குருளையை பாதுகாப்பதை போல ஆட்சி நடத்தியதை சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன. வாக்குரிமை என்பது அந்தக் காலத்தில் இருந்ததில்லை. ஆனால் மக்கள் மன்னரை நேசித்தனர். மன்னருக்காக உயிரையும் கொடுத்தனர். நெல்லும் உயிர் நீரும் உயிர் என்று மன்னன் தன் உயிரே என மக்கள் வாழ்ந்தனர்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற ஆட்சிமுறை பொது மக்களையும் அரசியல் நீரோட்டத்தில் இணைத்தது. ‘ஒவ்வொரு பொதுமகனும்; குடிமகனும் அரசன்’ - என்ற நிலைதான் இது. இந்த மண்ணில் வாழ்கின்ற அனைவரும் ஆளப்பிறந்தவர்கள் என்பதையும் அடிமைகள் என்று எவரும் இல்லை என்பதையும் உணர்த்துகின்ற ஒரு அரசியல் அரங்கில் வாக்குரிமை முக்கியம் பெற்றுவிட்டது.
இன்றும் பலர் வாக்குரிமை எதற்காக? வாக்குரிமையின் பயன்கள் என்ன? -என்ற விடை தெரியாத வினாக்களுடன் அங்கலாய்க்கின்றனர் ; தடுமாறுகின்றனர். உண்மையில் ஒவ்வொரு சாதாரண மனிதனும் வாக்குரிமையின் மூலமாக சரித்திரத்தை படைக்கின்றான்;மாற்றி அமைக்கிறான்.. வளர்முக நாடுகளில் உள்ள மக்களின் அரசியல் கூர்மையும் புத்தி தெளிவும் எம்மிடத்தில் இல்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் வாக்குரிமையை ,அதன் அத்தியாவசியத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது.
ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய சுயவிருப்பத்துக்கு ஏற்ப அரசியல் தலைவர்களை தெரிவு செய்தல் தான் வாக்குரிமை. அரசியல் கடலில் மூழ்கி முத்தெடுத்த சந்தர்ப்பம் இதெனலாம். வாக்குரிமை என்பது அனைவரையும் சமத்துவம் உடையவர்களாக ஆக்கிக்கொள்கிறது. பணக்காரன் ஆயினும் ஏழை ஆயினும் கல்வி மேதை ஆயினும் கல்வி அறிவில்லாதவர் ஆயினும் வாக்குரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் சமமானவர்கள் என்கின்ற நிதர்சனத்தை விதைப்பது. மரணத்தின் வாயிலில் நிற்கின்ற தள்ளாடும் முதியவரின் பாக்கும் அரசியல் போரில் எழுதப்படும் கூறிய அம்பாகும்.
பொதுசன அபிப்பிராய தேர்தலில் ஒவ்வொருவரும் நாட்டிலே விசுவாசம் கொண்டவர்களாக வேண்டியவர்கள் ஆகின்றார்கள். உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என்பது ஒரு பள்ளி மாணவனின் பரீட்சைகளைப் போல நமது ஜனநாயக நாட்டில் மக்களை இயங்க வைக்கின்றது.
வாக்குரிமையை நாங்கள் பயன்படுத்தாத போது தகுதியற்றவர்கள் தலைவர்கள் ஆகி விடுகின்றார்கள். இந்த நிலை முழுநாட்டுக்குமே கேடாக அமைகின்றது. இன்றைய உலகமயமாதல் சூழலில் நாமும் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் அரசியல் விழிப்புணர்வு அவசியம் .. வாழ்வில் ஒருவர் தமது வாழ்வில் கைக்கொள்ளவேண்டியது நாட்டுப்பற்று. அந் நாட்டுப் பற்றின் அடையாளமாகவும் வாக்குரிமை அமைகின்றது. இதனால்தான் பாடசாலைகளிலும் என்று மாணவர் தேர்தல் என்பது அறிமுகமாகி இருப்பது மெச்சத்தக்கது.
Post a Comment