‘ஈழ முதற் பணி இமயம் வரை
கொடிகட்டும் இசை தமிழன்
இந்தி வானியை ஆங்கில பீடத்து
ஏற்றிய புதுமையினோன்’
என்ன கிழக்கிலங்கையின் விடிவெள்ளி சுவாமி விபுலானந்தரைப் போற்றிப் பாடினார் புலவர்மணி. மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பிலே காரைதீவு என்னும் ஊரிலே 1892-ஆம் ஆண்டு சாமித்தம்பி என்பவருக்கும் கண்ணம்மையாருக்கும் மகனாக அவதரித்து, இலங்கை முழுவதும் மங்காத புகழ் பரப்பியவர் தான் சுவாமி விபுலானந்தர். மயில்வாகனன் என்னும் இளமைப் பெயரைக் கொண்ட இவர் இறை பக்தி மிகுந்த சமய போதகர் ஆகவும், கல்வியியலாளர் ஆகவும், இலக்கியப் படைப்பாளியாகவும், ஈழ மண்ணில் சுடர்விட்டுப் பிரகாசித்தார்.
விஞ்ஞானத்துறை பட்டதாரியான விபுலானந்தர் தமிழ் , ஆங்கிலம், சமஸ்கிரதம், மலையாளம் முதலிய மொழிகளில் தேர்ச்சியும் பெற்றிருந்தார். விபுலானந்தர், திருகோணமலை இந்துக் கல்லூரியின் அதிபராகவும், மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியின் அதிபராகவும், அத்தோடு இரு கல்லூரிகளினதும் ஸ்தாபகர் ஆகவும் விளங்கினார்.
முத்தமிழ் வித்தகர் என போற்றப்படும் அழகர், ‘யாருடைய இதயம் ஏழை மக்களுக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கிறது அவரையே மகாத்மா என்பேன்’ என்கின்ற விவேகானந்தரின் வார்த்தைகளை போல ஏழை மக்களுக்கு கல்வி புகட்டும் சாலைகளையும் , அனாதை இல்லங்களையும் அமைத்து தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தவர். இவர் நிறுவிய ‘ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கம்’ அடிகளார் மீது இன்னும் நாட்டம் கொள்ள வைக்கின்றது.
சுவாமி அவர்கள் சிறந்த கவிஞராக விளங்கினார். மௌனமாய் கிடக்கும் உணர்வுகளை கரையொதுங்கி விடாது கவிதையாய் தந்தவர்.
‘ஐயமும் அழகும்’ , ‘வண்ணமும் வடிவும்’ ,
‘ நிலவும் பொலிவும்’ , ‘ கவியும் சால்பும்’
எனும் கட்டுரைகளையும் அடிகளார் நமக்கு அருளியுள்ளார்.
அடிகளார் அவர்கள்,
விவேகானந்த ஞான தீபம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை,
கரும யோகம்
முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து
உள்ளதுடன் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ,
கார்டனர் என்னும் நூலை செந்தமிழில்
பூஞ்சோலைக்காவலன் என்னும்
பெயரில் மொழிபெயர்த்து உள்ளார்.
பத்திரிகை துறையிலும் கூட அடிகளாரின் பணி இருந்ததுடன்,
இலங்கைப் பல்கலைக்கழகத்தின்முதல் தமிழ் பேராசிரியராகவும், அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும்
திகழ்ந்த பெருமை அடிகளாரை சாரும்.
Post a Comment